Thursday, May 21, 2009

என்ன எண்ணுவதோ? எண்ண எண்ணுவதோ? என்னை எண்ணுவதோ? எண்ணி எண்ணுவதோ? இல்லை என்னால் எண்ணுவதோ?

வலைப்பூ நண்பர்கள் சிலரின் மனக்குமுறல்களை தொடர்ந்து நான் எழுதிய ..
.
நண்பரே.. ஒவ்வொரு தமிழனின் மனதிலும் இருக்கும் வலி உங்கள் எழுத்துகளில் புரிகிறது.. நீங்கள் இருக்கும் இதே மனநிலையில் தான் நானும்.. என்ன எழுதுவது என்றே புரியவில்லை.. செய்தியை நான் கேள்விப்பட்டதும்.. இன்னும் உத்தியோகபூர்வமாக அறிவிக்கவில்லையே என்று மனதை தேற்றிக்கொண்டேன்.. ஆனால் செய்தி வெளிவந்ததும்.. அந்த படக்காட்சிகளை கண்டதும்.. இப்போது இதிலே ஏதோ கபடம் இருப்பதாகவே தோன்றுகிறது.. யுத்தம் முடிவடைந்துவிட்டது என்று அறிவித்த பின்னர்.. பிறந்ததில் இருந்து சாவுகளை மட்டுமே கண்டும் கேட்டும் இருந்த எனக்கு.. இனி மேல் சாவுகள் குறைந்துவிடும் என்ற உண்மையை சந்தோஷமாக யோசித்தாலும்.. இன்று வரையில் அவை தொடருகின்றன.. என்ன பயன்? கறுப்பு ஜூலை மீண்டும் வந்துவிடுமோ என்று தோன்றியது.. இப்போது அப்படி நடக்காது என்றே தோன்றுகிறது.. காலம் இலங்கை வாழ் தமிழர்களுக்கு பதில் சொல்லட்டும்.. வெளி நாட்டில் இருக்கும் நண்பர்களே.. தயவு செய்து உங்கள் மன வேதனைகளை கொஞ்சம் அடக்கிவைத்துக்கொள்ளுங்கள்.. நீங்கள் அங்கே கதறும் போது எல்லாம் இங்கே எத்தனை உயிர்கள் பறிக்கப்படுகின்றன என்று உங்களுக்கு தெரியாது.. தேவைப்படும் போது எரிமலையாய் வெடிக்கட்டும்..
.
நல்லவர்களுக்கு ராம்.. தீயவர்களுக்கு ராவணா.. இரண்டும் கலந்த நான் ரம்ராவணா..

add to del.icio.us saved by 0 users

Saturday, May 9, 2009

நிகண்டு

அத்திக்காய் காய் காய்.. ஆழங்காய் வெண்ணிலவே..என்ற பாடலை நீங்கள் கேட்டிருப்பீர்கள்.
.
இந்த பாடலின் நேரடியான அர்த்தம் அத்திக்காய் என்ற பழத்தை போலவும் ஆலங்காய் பழத்தை போலவும் நிலவு இருக்கிறது என்பதை போல தோன்றும். ஆனால் உண்மையான அர்த்தம் இதுவல்ல,
அத்திக்காய் = அந்த திக்கில்.. ஆழங்காய் = தூரமாக (என்றும் எடுத்துக்கொள்ளலாம்) என்பதே பொருள்படும்.
.
அதை போல எப்போதோ என் தந்தையிடம் இருந்து ஒரு சித்தர் எழுதிய நிகண்டை கற்றுக்கொண்டேன்.
.
"வெங்காயம் சுக்கானால்..
வெந்தயத்தால் ஆவதென்ன?
மங்காத சீரகத்தை தருவீரேயானால்..
வேண்டேன் பெருங்காயம்..
ஏறகத்துச்செட்டியாரே"
.
நேரடியாக ஏதோ மலிகை சாமான்களை பற்றி யாரோ செட்டியாரிடம் கேட்பதை போல தோன்றினாலும். உண்மையான அர்த்தம் அதுவல்ல. இது,
.
உயிரற்ற உடல் சாம்பலானால்..
எறிந்த உடலால் பயன் என்ன?
அழியாத சீரான உடலை நீ தந்தால்..
இப்போதிருக்கும் இந்த உடல் எனக்கு தேவையில்லை..
முருகா..
.
ஏறகத்துச்செட்டியார் = முருகன் இட்ட ஒரு வேடம் என்று படித்திருக்கின்றேன்.
.
இது தான் பொருள். நிகண்டுகளின் ரசிகன் நான்.
.
உங்களுக்கு தெரிந்த நிகண்டுகள் ஏதேனும் உண்டா?

add to del.icio.us saved by 0 users

Friday, May 8, 2009

இன்றைய நிகழ்வும் சிந்தனையும்! - 2

நான் இன்று வேலை முடித்து சரியாக 5.30 மணிக்கெல்லாம் Food City க்கு (வெளியில் சில பொருட்கள் இதை விட பாதிக்கு பாதி மலிவாக கிடைத்தாலும், எல்லாம் ஒரே இடத்தில் கிடைக்கும் என்பதால்) அவசரமாக சென்று இரவு உணவிற்கு தேவையான சில பண்டங்களை வாங்கிக்கொண்டு வெளியே வந்து ஒரு முச்சக்கர வண்டி ஓட்டுனரிடம் போய், என் வீடு இருக்கும் இடத்தை கூறிவிட்டு "கீயக்த ஓனே" (எவ்வளவு வேண்டும்) என்று கேட்டேன், அவன் 150 என சொல்லி ஒரு வழியாக பேரம் பேசி 120 ரூபாய்க்கு சம்மதித்து (பின்ன என்னங்க? இப்ப நாட்ல இருக்க விலைகள பார்கயில தலை சுற்றுது, 30 ரூபாய் மிச்சம் பிடிச்சால் எதற்காவது பயன்படுமுங்கோ) வண்டியில் ஏறினேன்.
.
நான் சிறு வயது முதல் சிங்களவர்களுடன் நெருக்கமானவன், என் வீட்டை சுற்றி இருப்பவர்களாகட்டும், எனக்கு படிப்பித்த ஆசிரியர்களாகட்டும், இப்படி இன்று வரை என்னை சுற்றி இருந்த அனைவரும் நல்லவர்கள் தான், மனிதம் என்ற ஒன்று எம்மை ஒன்றிணைக்கிறது அல்லவா? எனக்கு கொஞ்சம் கூட துவேசம் என்ற ஒன்று எப்போதும் கிடையாது, இனிமேலும் வராது.
.
சரி, இது தான் நடந்தது. நான் பேசும் சிங்களம் மிக துல்லியமாக இருக்கிறது என்று பல பேர் சொல்லி கேட்டிருக்கின்றேன், ஆனால் அது இன்று தான் எனக்கு மிகவும் நன்றாக விளங்கியது.
.
அந்து ஆட்டோக்காரன் என்னுடன் கொஞ்சம் கொஞ்சமாக பேசத்தொடங்கினான், முதலில், "மஹத்தயா, பலன்னகோ அத ரட்டே படுவள மில" (பாருங்கள் ஐயா இன்றைக்கு நாட்டில் விற்கும் பொருட்களின் விலையை), இனி எனக்கும் அவனுக்கும் இடையில் நடந்த சிங்கள உரையாடலை தமிழிலேயே எழுதுகின்றேன்.
.
ஆ.கா : இப்படி போய்க்கொண்டிருந்தால், என்ன நடக்குமோ தெரியவில்லை.
நான் : என்ன தான் செய்வது?
ஆ.கா : அப்டி இல்லை ஐயா, இந்த யுத்தம் இன்னும் கொஞ்ச நாளில் முடிந்து விடும் பாருங்கள், அதன் பிறகு எல்லாம் சரியாகிவிடும்.
நான் : ம்ம் (அரசியல் விஷயங்கள் பற்றி பெரிதாக நான் யாரிடமும் கதைக்க விரும்புவதில்லை, மிக நெருக்கமான நண்பர்களுடன் மட்டுமே விவாதிப்பேன்)
ஆ.கா : யாழ்ப்பாணத்தில் இருக்கும் மக்களில் யார் புலிகள், யார் நல்லவர்கள் என்றே புரியவில்லை. எல்லோரையும் போட்டு தள்ளினால் சரி. இந்த தமிழ் நாய்களால் தான் எல்லா பிரச்சினையும் எங்கள் நாட்டுக்கு.
நான் : மௌனம்.
.
இப்படி அவன் உரையாடல் தொடர்ந்து கொண்டே போனது. அவன் பேசும் ஒவ்வொரு வசனத்திலும் எவ்வளவு துவேசம் இருக்கிறது என்று உணர்ந்து கொண்டேன். இப்படியே என் வீட்டு முற்றம் வரை வந்தாயிற்று, நான் அவனுக்கு பணம் கொடுத்து இறங்க வேண்டிய நேரம். எனது பணப்பையை (wallet என்பதை பணப்பை என்று நண்பர் லோஷன் அவர்கள் எங்கோ எழுதியிருந்தார் -
http://loshan-loshan.blogspot.com) திறந்து, அவன் முதலில் கேட்ட 150 ரூபாயை அவனிடம் கொடுத்து விட்டு, மிகுதியை நீயே வைத்துக்கொள் என்றேன், அவன் நன்றியுடன் என்னை பார்வையிட்டது போல் தோன்றியது. கடைசியாய் "மமத் தெமல தமாய்" (நானும் தமிழன் தான்) என்று கூறிவிட்டு, அவன் முகத்தை பார்க்காமல் வீடு வந்து சேர்ந்தேன் (திருவள்ளுவரின் வழியை பின்பற்றியதில் எனக்கு கொஞ்சம் பெருமை கூட - குறள் என்னவென்று உங்களுக்கு தெரியும்).இனிமேல் அவன் வேறு யாரேனும் தமிழர்களுடன் செல்லும் போது என்னை பற்றி நிச்சயம் நினைப்பான்.
.
இதை என் பக்கத்துக்கு வீட்டு சிங்கள நண்பருடன் பகிர்ந்து கொண்டேன். அவர், நல்ல வேலை செய்தாய், நானாக இருந்திருந்தால், உன்னை போல் சிலரால் தான் இந்த நாடு இரண்டு பட்டிருக்கிறது என்று கத்தியிருப்பேன் என்றார். 1983 பிரச்சினைகளின் போது இவர் வீட்டில் தான் நாங்கள் (என் குடும்பத்தில் 5 பேர், என்னுடன் சேர்த்து) ஒழிந்திருந்தோம். இன்றைக்கு நாங்கள் உயிருடன் இருக்கிறோம் என்றால் அதற்கு இவர் தான் ஒரு முக்கிய காரணம்.
.
செவி வழி வந்த ஒரு விடயத்தை இங்கே குறிப்பிட விரும்புகின்றேன். 1956 களில் பண்டரநாயக்க அவர்கள் சிங்கள மொழி மட்டுமே இலங்கையின் உத்தியோகப்பூர்வ மொழி என்று பாராளுமன்றத்தில் அறிவித்தார், இதற்கு மாற்று கருத்து தெரிவித்த கொல்விநா த சில்வா அவர்கள் பின் வருமாறு தெரிவித்ததாக தெரிந்துகொண்டேன்.
.
"பாஷா தெக்காய், ரட்ட எக்காய்.. பாஷாவ எக்காய், ரட்ட தெக்காய்"
.
தமிழ்படுத்தினால்:
.
"பாஷை இரண்டு, நாடு ஒன்று..பாஷை ஒன்று, நாடு இரண்டு"
.
லங்கா சம சமாஜிய என்ற கம்யூனிஸ்ட் கட்சியை சேர்ந்த ஒரு தலைவர் இவர். இதன் உண்மைகளை கண்டறிய இந்த மனிதர் இன்று உயிருடன் இல்லை.
.
இதே வருடங்களில் நடந்த தேர்தல் நடவடிக்கைகளில் நடந்த மற்றொரு விடயத்தையும் (நான் கேள்விப்பட்ட விடயத்தையும், அப்போது நான் பிறக்கவே இல்லை) எழுதுகின்றேன்.
.
சுபாஷ் சந்திர போஸ் சங்கங்கள் போன்ற கட்சிகள் காணப்பட்ட நேரம் அது, அப்போது நேரு அவர்கள், இப்படி தமிழர்களின் கட்சிகள் தனித்தனியாக இருக்கக்கூடாது, எல்லாவற்றையும் ஒன்றிணைத்து ஒரு பெரிய கட்சியாக உருவாக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டதன் பலனாக, இலங்கை இந்திய தொழிலாளர் காங்கிரஸ் அமைக்கப்பட்டது, இதில் ஆரம்ப காலங்களில் வெவ்வேறு தலைவர்கள் இருந்தாலும் பின்னர் ஜனரஞ்சகமாக இருந்த தொண்டமான் அவர்களே தலைவரானார். அசீஸ் அவர்கள் இந்த கட்சியை விட்டு விலகியதன் பின்னர் ஜனநாயக தொழிலாளர் காங்கிரஸ் என்ற ஒன்று ஆரம்பிக்கப்பட்டதாம். அப்போது நடந்த தேர்தல் பிரச்சாரங்களின் போது அசீஸ் அவர்கள் கூறினாராம் (என்னை மன்னியுங்கள், சில விஷயங்களை எழுதித்தான் புரியவைக்க முடியும்) "நான் இனி தொண்டமானை விட மாட்டேன், தொண்டமானின் கொட்டையை பிடிப்பேன்" (கோட்டையை என்று கூறுவதற்கு பதில் நா வழுக்கி (Tongue Slip) விட்டதாம்) என்று மேடையில் பேசியிருக்கிறார். அதற்கு சில நாட்களுக்கு பின் தொண்டமானின் மேடை பேச்சு: "எவனோ ஒருத்தன் வந்தானாம், என் கொட்டைய பிடிப்பேன்னு சொன்னானாம்" என்று கிண்டல் அடித்திருக்கிறார் (தோட்டப்புறங்களில் வாழும் அப்பாவி மக்களுக்கு இப்படி எல்லாம் பேசினால் ரொம்ப பிடிக்குமாம்) இது உண்மை சம்பவம். கற்பனை கதை அல்ல.
.
ஷொட்டு: பாராளுமன்றத்தில் கொல்விநா த சில்வா (Colvina De Silva) போன்றோர், நாடு எதிர் கொள்ளப்போகும் பிரச்சினைகள் பற்றி பேசிக்கொண்டிருக்கும் போது, தமிழ் மக்களுக்கு தலைவர்கள் என்று நிர்ணயிக்கப்பட்டோர் எதை பற்றி பேசியிருக்கிறார்கள் என்று பாருங்கள்.

add to del.icio.us saved by 0 users

Thursday, May 7, 2009

IPL இல் ஷாருக் பேட்டியின் ஒரு சிறிய பாகம்

அண்மையில், அதாவது ஷாருக் South Africa வில் இருக்கும் போது மந்திரா பேடியுடன் நடந்த அந்த குறும் பேட்டியில் என்னை கவர்ந்த ஒரு செய்தி:
.
மழை பற்றியும் டக்வேர்த் லுயிஸ் விதி (Duckworth Lewis Rule) பற்றியும் கேள்வி எழுப்பப்பட்ட போது, ஷாருக் கூறிய அந்த விடயம்:
.
"எந்த ஒரு போட்டியானாலும் அது முழுமையாக விளையாடிய பின்னர் வரும் வெற்றி அல்லது தோல்வி தான் முழுமையானது, நிறைவை தரக்கூடியது. Duckworth Lewis Rule பற்றி பேசுவதானால், எனக்கு Mr. Duckworth அல்லது Mr. Lewis யார் என்று தெரியாது, ஆனால் அவர்களை சந்தித்து, இது பற்றி பேச வேண்டும்" என ஹாஸ்யமாக குறிப்பிட்டார்.
.
Frank Duckworth மற்றும் Tony Lewis இவர்கள் இருவரும் நிர்ணயித்த இந்த விதி பற்றி தெரிந்து கொள்ள: http://en.wikipedia.org/wiki/Duckworth-Lewis_method
.
ஷொட்டு: ஷாருக் அவர்களே Duckworth Lewis விதியை விடுங்க. KKR டீம் தலை விதி என்னாகுதுன்னு கொஞ்சம் பாருங்க.

add to del.icio.us saved by 0 users

Wednesday, May 6, 2009

பல்லி விழும் பலன் உண்மையா? மூட நம்பிக்கையா?

நீண்ட நாட்களுக்கு பின்னர் மீண்டும் எழுதுகின்றேன். ஒவ்வொரு நாளும் எழுத வேண்டும் என்பது தான் என் ஆசை. அனால் கடந்த சில நாட்களாக எனக்கு காய்ச்சல். உடல் சோர்வின் காரணமாக கணனியிடம் வரவேயில்லை.
.
சரி, இன்று ஒரு விஷயமாக எனது சிந்தனை திரும்பியிருக்கிறது. பல்லி விழும் பலன் பற்றி உங்கள் கருது என்ன?
.
இதை நான் ஏன் கேட்கின்றேன் என்றால், மூன்று நாட்களுக்கு முன், எனக்கு காய்ச்சல் கொஞ்சம் குறைந்திருந்தது. எனவே சோர்வை சற்றே நீக்கிக்கொள்ள, வாசல் கதவை திறந்து வெளியே செல்ல ஆசைப்பட்டேன். கதவை திறந்தது தான் தாமதம், கதவில் ஒட்டிக்கொண்டிருந்த சினஞ்சிரிய பல்லி ஒன்று எந்தன் இடது கை மணிக்கட்டில் விழுந்தது. பள்ளி விழுந்தால் சரியில்லை என்பார்களே, சரி டக்கென்று ஓடிப்போய் பஞ்சாங்கத்தை புரட்டிப்பார்த்தேன், இடது கை மணிக்கட்டில் பள்ளி விழுந்தால், கீர்த்தி என்றும், இடது கையில் விழுந்தால் மரணம் என்றும் காணப்பட்டது.
.
கீர்த்தி என்று இருந்ததால் கொஞ்சம் மனதை தேற்றிக்கொண்டு, வெளியே சென்று வாசல் முற்புறத்தில் அமர்ந்தேன். எனது செல்பேசியை கையில் வைதிருந்தபடியே நோட்டம் விட்டுக்கொண்டிருண்டேன்.
.
பக்கத்து தெரு, வீட்டு முற்றத்தில் ரோஜாச்செடி , இப்போது தான் வளர்ந்து கொண்டிருக்கும் துளசிச்செடி, அடுத்த வீட்டு சிறுமியின் குறும்பு, மாமரத்தில் அழகாய் உட்கார்ந்திருக்கும் ஏதோ ஒரு குருவி, காகம் கரையும் சத்தம், தூரத்தில் பஸ் ஹோர்ன், சாலை வழியே சண்டை போட்ட படி நடந்து செல்லும் ஒரு தந்தையும் மகனும், ஓரப்பார்வை பார்த்த படி சென்ற யாரோ ஒருத்தி, அவள் நடை, மோட்டார் பைக் சக்கரங்களுக்கு குறைக்கும் தெரு நாய், வானம், அக்கினி நட்சத்திர வெயில், சூரியனை சுற்றி எத்தனையோ கோள்கள், அதில் எமது கோளில் மட்டும் மனிதம் என்ற ஒன்று, எவ்வளவு பெரிய விஷயம் இது ஒரு மகத்தான யுகம் எங்கள் கோளுக்கு மட்டும், ஒரு மனிதன் இன்னொரு மனிதனை பார்க்கும் போது எவ்வளவு சந்தோஷப்பட வேண்டும், என்னை போலவே நீயும் இயற்கையின் ஒரு உயர்ந்த மகத்தான படைப்பு என்று, ஆனால் இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது? பொறாமை, யுத்தம், தீய செயல்கள் இப்படி இந்த உலகமே அழிந்து கொண்டிருக்கிறதே, சரி தான் எங்களுக்கு பின் வரும் ஜீவ ராசிகளாவது இந்த உலகை மாற்றட்டும் என்று கற்பனை எங்கெங்கோ அலைந்து கொண்டிருக்கையில் எனது செல்பேசிக்கு ஒரு அழைப்பு வந்தது,
.
"ஹலோ" என்று கூறி காதில் வைத்தேன், எனக்கு மிகவும் நெருக்கமான நண்பியின் அம்மாவுக்கு உடல் நலம் பாதிக்கப்பட்டு, வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு, ஹார்ட் அட்டாக் (Heart Attack) என்று டாக்டர்கள் சந்தேகப்படுவதாக செய்தி வந்தது.
.
உடனே யோசித்துப்பார்த்தேன், "ஏய் பல்லியே இது தானா நீ எனக்கு கொண்டு வந்த கீர்த்தி?"
.
நண்பர்களே இது குறித்த உங்கள் கருத்துக்களை என்னுடன் பகிர்ந்து கொள்ளுங்கள்.
நான் உங்களில் ஒருவன்!
- ராம்ராவணா

add to del.icio.us saved by 0 users

Sunday, April 26, 2009

இன்றைய நிகழ்வும் சிந்தனையும்!

சரியாக மாலை 6 மணி இருக்கும், நானும் என்னுடைய நண்பனும் ஒரு PUB இலிருந்து வெளியேறியிருந்தோம். நான் இரண்டே இரண்டு Beer மட்டும் குடித்திருந்தேன், என் நண்பனோ வெறும் Lime Juice மட்டுமே. எனவே, எனக்கும் அவ்வளவாக போதை கிடையாது, என் நண்பனுக்கோ முற்றாக போதை கிடையாது.
.
சாலையின் வழியே மெதுவாக நடந்து கொண்டிருந்தோம். ஒரு அழகிய இளம் பெண் எங்களை கடந்து சென்று, சற்று முன் புறம் காணப்படும் பஸ் தரிப்பிடத்தில் நின்றுகொண்டிருந்தாள். என் நண்பனோ அவளை கண்டதும் கலங்கி விட்டான் போலும். சுமாரான Figure தான். அவ்வளவு ஒன்றும் பேரழகி இல்லை. இருந்தாலும் என் நண்பன் இருக்கிறானே, கொஞ்சம் ஒரு பெண்ணை கண்டால் உடனே ஏதோ உலக அழகி ஐஸ்வர்யாவையே (எனக்கு கொஞ்சமும் பிடிக்காத ஒரு பெண்) கண்டதை போல திக்குமுக்காடி போவான்.
.
சரி, விஷயத்துக்கு வருவோம். உடனே என்னிடம் "டேய் மச்சான் செம பிகருடா, பேசலாமா?" என்று கேட்கும் போதே, இது நான் எதிர் பார்த்த விஷயம் தாண்டா என்பதை போல ஒரு look விட்டேன். அதிரிச்சி என்னவென்றால், அவன் பேச முன்னரே அவளாகவே வந்து, "whats the time now?" என்று கேட்டாள். நான் கொஞ்சம் ஒதுங்கியே வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்தேன். என்ன பேசினானோ தெரியல, ஒரு 5 நிமிஷம் இருக்கும், அவளுடைய மொபைல் நம்பர் கூட இப்ப அவன் கைவசம் இருக்கின்றது. ஆண்டவா, பெண்களை நம்பாதே. திரும்பி நடக்க தொடங்கினோம், கொஞ்சம் தூரம் வந்ததும், திரும்பி பார்த்தேன், ஒரு motor bike இல் நல்ல வாட்ட சாட்டமான ஒருவன் அவளை pick up பண்ணிக்கொண்டிருந்தான் (அட, bike ல தானுங்க). என்ன கொடுமை சார் இது? Boyfriend ஆ இல்ல என்னோட friend போல எவனாச்சும் ஒருத்தனா?
.
ஷொட்டு : இதை வாசிக்கும் பெண் நண்பிகளே.. தயவு செய்து என் மேல கோவப்பட வேணாமுங்க.. எல்லா பெண்களும் இப்படி இல்லை, அதே நேரம் என் நண்பனை போல சில ஆண்கள் இருக்கும் வரையில், இப்படிப்பட்ட பெண்கள் இருக்கத்தானே செய்வாங்க!

add to del.icio.us saved by 0 users

Saturday, April 25, 2009

என் எண்ணங்கள் பற்றி..

நாம் இந்த உலகில் பிறப்பதற்கு எங்கே நிபந்தனைகள் பிறந்தனவோ.. அங்கேயே என் பதிவுகளும் பிறந்தன.. சிந்திப்பதற்கு கோடி விடயங்கள் இருப்பினும் நான் இங்கே எழுதப்போவது யாவும், நான் சிந்தித்த சில விடயங்களை மாத்திரமே.. என்னுள் கேட்கப்படும் எத்தனையோ கேள்விகளுக்கு நான் விடையற்று தவித்திருக்கின்றேன்.. கோடி பந்திகள் எழுதியும் புரிய வைக்க முடியாத என் எண்ணங்கள்.. இதோ வந்துவிட்டேன்.. உங்களிடம் கூற.. முடிந்தால் பதில் கூறுங்கள்.. இல்லாவிட்டால் கேள்விகளையே மீண்டும் கேளுங்கள். .
- ராம்ராவணா

add to del.icio.us saved by 0 users